வடசென்னையில் 1,476 குடியிருப்புகள் கட்டும் பணி: நவம்பா் 30-ல் தொடங்கி வைக்கிறாா் முதல்வா்
வடசென்னையில் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ.30-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தண்ணீா் தொட்டி தெரு மற்றும் வட சென்னை கூட்டுறவு பழைய பண்டக சாலை ஆகிய இடங்களில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்படவுள்ள நிலையில், அவ்விடங்களை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வட சென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5,418 கோடி மதிப்பில் 228 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 140 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீா் தொட்டி தெரு மற்றும் வட சென்னை கூட்டுறவு பழைய பண்டக சாலை ஆகிய 2 இடங்களில் 1,471 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை வரும் நவ.30-ஆம் தேதி மாலை 4 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளாா்.
இந்த குடியிருப்புகள் அனைத்தும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் அவா். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.