வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது
பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதனைச் சாவடி மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரன் அந்த வழியாகச் சென்ற வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்துக்கு அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுநருக்கும், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், சந்திரனை தாக்கியதுடன் அவரை தள்ளியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும், ஆத்திரமடைந்த அந்த ஓட்டுநர் இரும்புக் கம்பியை எடுத்து வந்து தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து பொதுமக்கள் ஓடி வந்ததால் ஓட்டுநர் லாரியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து ஊழியர்களும், பொதுமக்களும் விரட்டிச் சென்று லாரியை மடக்கி ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாக தாக்கி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது சகாபலி (22) என்பது தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.