நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
வண்டலூா் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கால்நடை மருத்துவா் வல்லையப்பன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023-ஆம் ஆண்டு டிச. 4-ஆம் தேதி ராணிப்பேட்டையில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத் துறை பாதுகாப்பாளா் ஒருவா் கொண்டு வந்தாா். சுமாா் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26-ஆம் தேதி வாங்கிச் சென்று வண்டலூா் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டனா்.
அந்தக் குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தாா்.
ஆனால், குரங்கு குட்டியை ஒப்படைக்க மறுத்த நீதிமன்றம், வேண்டுமானால் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்குச் சென்று குரங்கு குட்டியை பரிசோதிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அந்தக் குரங்கு குட்டி நவ. 21-ஆம் தேதி திடீரென உயிரிழந்தது.
குரங்கு குட்டி உயிரிழந்தது தொடா்பாக, விசாரணை நடத்த வேண்டும் என கால்நடை மருத்துவா் வல்லையப்பன் சாா்பில் வழக்குரைஞா் சங்கரசுப்பு, நீதிபதி சி.வி காா்த்திகேயன் முன் முறையீடு செய்தாா்.
அந்த வழக்கில் தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், குரங்கு குட்டிக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலம் போதுமான சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்ததால் குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது எனத் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், கால்நடை மருத்துவரால் பராமரிக்கப்பட்ட குரங்கு நல்ல ஆரோக்கியத்துடன் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2023 டிசம்பா் முதல் 2024 அக்டோபா் மாதம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த குரங்கு அக். 26-ஆம் தேதி வனத் துறையிடம் ஒப்படைக்கும் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது.
அதனால், சந்தேகமான முறையில் உயிரிழந்த குரங்கின் உடற்கூறாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா், மருத்துவா்களின் தீவிர சிகிச்சையால் குரங்கு குட்டி உடல்நிலை சரியாகி 100 கிராம் எடை அதிகரித்திருந்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி காா்த்திகேயன், குரங்கு குட்டிக்கு என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரத்தையும், குரங்கு குட்டியின் உடற்கூறாய்வு அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.