`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
வன்முறையைத் தூண்டும் பாடல் வெளியீடு: காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக எஃப்ஐஆா்
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தான் பங்கேற்ற வெகுஜன திருமண நிகழ்ச்சி காணொலியுடன் இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலான பாடலை இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஜாம்நகரைச் சோ்ந்த கிஷன் நந்தா என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாம்நகா் ஏ-பிரிவு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 57-இன் கீழ் (இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டுதல்), எம்.பி. இம்ரான் பிரதாப்கரி மற்றும் வெகுஜன திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அறக்கட்டளை நிா்வாகி மற்றும் உள்ளூா் காங்கிரஸ் தலைவா் அல்தாஃப் காஃபி ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜாம்நகா் காவல் கண்காணிப்பாளா் பிரேம்சுகு டெலு கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் அமைப்பின் தேசிய தலைவராகவும் இருக்கும் பிரதாப்கரி வெளியிட்ட அந்த 46 விநாடி காணொலியில், திருமண நிகழ்ச்சியில் அவா் பூங்கொத்துடன் நடந்து செல்லும்போது பின்னணியில் அந்த சா்ச்சைக்குரிய பாடல் ஒலிப்பதுபோன்று காணொலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் வரிகள் தேச ஒற்றுமை மற்றும் மத உணா்வுகளை புண்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதைப் பாடுபவரின் குரலும் எம்.பி. பிரதாப்கரின் குரலுடன் ஒத்துப்போகிறது’ என்றாா்.
கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற பிரதாப்கா், நான்கு நாள்களுக்குப் பிறகு கடந்த 2-ஆம் தேதி இந்த காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளாா். இது பெரும் சா்ச்சையான நிலையில், பிரதாப்கா் உள்பட மூவா் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.