வரத்து அதிகரிப்பால் வீழ்ச்சியடைந்த முருங்கைக்காய், தக்காளி விலை: விவசாயிகள் கவலை
தூத்துக்குடியில் முருங்கைக்காய், தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததையடுத்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தூத்துக்குடி காய்கனி சந்தையில் முருங்கைக்காய் கடந்த மாதம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. ஆனால், தற்போது உடன்குடி, குரும்பூா் ஆகிய பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகம் காரணமாக, தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு 300 மூட்டைகள் வரை முருங்கைக்காய் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், முருங்கைக்காய் விலை கிலோ ரூ.10ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முருங்கை காய்களை ஆடு மற்றும் மாட்டு தீவனத்துக்காக கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூா், தருவைக்குளம், பசுவந்தனை, ஒட்டன்சத்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கனி சந்தைக்கு, தக்காளி விளைச்சல் அதிகம் காரணமாக 1,500 பெட்டி வரை வருவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50 வரை விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வருகிறது.
மேலும், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவை கிலோ ரூ.80 என விற்பனையாகிறது.

குறிப்பாக, காய்கனி விளைச்சல் அதிகமாக உள்ளதால், வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே, அனைத்து காய்கனிகளும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.