வரிவிதிப்புகள்! டிரம்ப்பின் இடிமுழக்கமும் உலகின் பெருங் கலக்கமும்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் நிலைகுலைந்திருக்கின்றன; கடும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க பொருள்கள் மீது பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு இணையாக அல்லது கூடுதலான புதிய வரிவிகிதங்களை ஏப். 2 ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார்; இந்த நாளை லிபரேஷன் டே - விடுதலை நாள் என அவர் குறிப்பிட்டார். ஆனால், அமெரிக்கர்கள் உள்பட பலருக்கும் எரிச்சலான வெவ்வேறு பெயர்களில் மிக மோசமான நாளாகிக்கொண்டிருக்கிறது. பொதுவாக, பிளட்பாத் BloodBath – ரத்தக் குளியல் என்கிறார்கள். தமிழில் ரணகளம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
ஆசியாவில் இந்தியா 26%, சீனா 54%, கம்போடியா 49%, லாவோஸ் 48%, வியத்நாம் 46%, இந்தோனேசியா 32%, வங்கதேசம் 37%, இலங்கை 44% என்ற விகிதத்தில் வரிகளை விதித்திருக்கிறது அமெரிக்கா.
வரிவிதிப்பில் எந்த அளவுக்கு டிரம்ப் முனைப்பாகவும் ‘கண்மூடித்தனமாகவும்’ இருக்கிறார் என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு - ஹெர்ட் மற்றும் மெக்டொனால்ட் என்ற இரண்டு தீவுகளுக்கும் – அதாவது அவ்விரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் 10 சதவிகித வரி விதித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
என்ன நகைச்சுவை என்றால், அண்டார்க்டிகாவிலிருந்து வடக்கே சுமார் 1,000 மைல்கள் தொலைவிலுள்ள – ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற - இவ்விரண்டு தீவுகளிலும் மனிதர்களே கிடையாது; ஆளில்லா இந்தத் தீவுகளில் வெறும் பென்குயின் பறவைகள்தான் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதை வைத்து ஏராளமாக மீம்களை உருவாக்கி டிரம்ப் வகையறாக்களைத் தாளித்துக்கொண்டிருக்கிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.
அடுத்ததாக, டீகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கும் 10 சதவிகித இறக்குமதி வரி விதித்திருக்கிறார். இங்கே சுமார் 3000 பேர், அனைவருமே அமெரிக்கா, பிரிட்டிஷ் ராணுவத்தினர்தான் இருக்கின்றனர். இவர்கள் அமெரிக்காவுக்கு எதை ஏற்றுமதி செய்வார்கள்? யாருக்கு யார் வரி விதிப்பார்கள்?!
பதிலடியாக சீனா உடனுக்குடன் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34% வரி விதித்தது. கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என அனைத்து நாடுகளும் எதிர் வரிவிதிப்பில் அடுத்தடுத்த நிலைகளில் இருக்கின்றன (அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைவிடவும் அதிகளவிலான பொருள்களை அங்கிருந்து இறக்குமதி செய்கிற நாடுகளுக்கும் – ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆர்ஜென்டீனா – கூடுதல் வரிகள் விதித்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம்!)
அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10 சதவிகித வரி கட்டாயம். ஏப். 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள வரி விகித அமல் ஏப். 9 முதல் தொடங்குகிறது.
கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகள் பதிலடியாக அமெரிக்க இறக்குமதிகளுக்குக் கூடுதலாக எதிர்வரி விதிக்கத் தொடங்கினால், அவற்றின் மீதான வரிகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் டிரம்ப்; 34 சதவிகித வரி விதித்த சீனாவின் மீது தற்போது 104 சதவிகித வரி என்று அறிவித்திருக்கிறது அமெரிக்க நிர்வாகம்.
டிரம்ப் நினைத்தால் எந்தவொரு நாட்டின் மீதும் விதிக்கப்பட்ட இந்த வரிவிகிதங்களை ஒருவேளை குறைக்கவும் குறைக்கலாம்.
டிரம்ப்பின் அறிவிப்பால் உலக சந்தையில் நேரிட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக தொழில் - வணிக முடக்கம், உற்பத்தி வீழ்ச்சி, வணிகத்தில் சரிவு போன்ற அடுத்தடுத்த நிலைகளை எதிர்நோக்கி பெரு நிறுவனங்களின் பங்குகளே சரிந்துகொண்டிருக்கின்றன.
உலகின் மதிப்புமிக்க – முதல் பத்து இடங்களில் வருகிற - நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குமதிப்பு 16 சதவிகிதம் சரிந்துவிட்டது.
டிரம்ப்பின் அறிவிப்பு வெளியான முதல் இரு நாள்களிலேயே அமெரிக்காவின் 500 உயர் வணிக – தொழில் நிறுவனங்களில் 5 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டாளர்களின் மதிப்பு அடிவாங்கிவிட்டது. பங்குச் சந்தையில்தான் சுமார் 60 சதவிகித அமெரிக்க குடும்பங்கள் முதலீடுகளைச் செய்துவைத்துள்ளன. டிரம்ப் பதவியேற்ற ஜன. 20 தொடக்கம் இதுவரையிலான இழப்பு மட்டும் 21 டிரில்லியன் டாலர்கள்! (ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடிகள்).
‘இதுவொரு பொருளாதாரப் புரட்சி, நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டிரம்ப். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனோ, ‘கால்பந்தாட்டக்காரர்களின் மொழியில் சொல்வதானால் இது செல்ஃப் கோல்!’ என்கிறார்.
பங்கு மதிப்புகள் ஏன் சரிகின்றன? ஆப்பிள் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் முழுவதும் ஓராண்டில் 22 கோடி ஆப்பிள் போன்கள் விற்பனையாகின்றன. இவற்றில் சுமார் 80 சதவிகிதம் சீனாவில்தான் உருவாக்கப்படுகின்றன; சீனாவுக்கு - சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குதான் - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 20 சதவிகிதத்துடன் மேலும் 34 சதவிகித வரிகளை அறிவித்து, 54 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார் டிரம்ப். வேறு வழியே இல்லை, இதனால், ஆப்பிள் போன்களின் விலை 40 சதவிகிதம் வரை உயரலாம் எனக் கூறப்படுகிறது. சுமார் 15 சதவிகித ஆப்பிள் போன்களை உருவாக்கித் தரும் இந்தியா மீது 26 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது குறைவு எனக் கொண்டாலும் ஆப்பிள் போன் உற்பத்தி முழுவதையும் இந்தியாவுக்கோ அல்லது வேறெந்தவொரு நாட்டுக்கோ உடனடியாகத் திருப்பிவிடுவதென்பது அந்த நிறுவனத்துக்கு அவ்வளவு எளிதல்ல [இதனிடையே, கொஞ்ச காலத்துக்கேனும் விலையேற்றத்தைச் சமாளிக்கும் நோக்கில், இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் சரக்கு விமானங்களில் கணிசமான அளவு போன்களை அமெரிக்காவுக்கு ஆப்பிள் நிறுவனம் கொண்டுசென்றிருப்பதாகக் கூறப்படுகிறது].
அமெரிக்க ஏற்றுமதியில் நேரிடக் கூடிய பாதிப்புகள் காரணமாக, தொடர்புடைய நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தி நிலவரங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா அறிவித்தவுடனேயே மேலும் பல நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதல் வரி விகிதங்களை அறிவிக்க, சில நாடுகள் வரிகளைக் குறைப்பது பற்றி அமெரிக்காவுடன் பேசத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்னமும் அமைதியாக ஒரு நாடு இருக்கிறதென்றால் இந்தியாதான். இந்தியாவைப் பொருத்தவரை ஏனோ அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறது; பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் பேசிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
ஏற்கெனவே, அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுகிற வகையில் நிறைய செய்துகொண்டிருக்கிறது இந்தியா.
வரி, கூடுதல், குறைச்சல் என்று பேசத் தொடங்கியபோதே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போர்பன் விஸ்கி, மோட்டர் சைக்கிள்கள், செயற்கைக்கோள் மற்றும் அலைபேசி பாகங்கள் போன்றவற்றுக்கு வரிகளை இந்தியா குறைத்துவிட்டது (150 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகிதம் வரை). பெரியளவில் கவனம் பெறாத மற்றொரு குறைப்பு – இந்தியப் பயனர்களிடமிருந்து பெறப்படும் வருவாய்க்கு விதிக்கப்பட்டு வந்த 6 சதவிகித டிஜிட்டல் வரியையும் இந்தியா ரத்து செய்துவிட்டது – இதன் மூலம் கூகுள், மெட்டா, அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள்தான் பயனடைகின்றன. இன்னமும் இதுபோன்ற அமெரிக்காவுக்கு சலுகையளிக்கக் கூடிய வேறு பல விஷயங்களும் வரிசைகட்டி நின்றுகொண்டிருப்பதாகத் தகவல்கள்.
இந்த வரி விதிப்பின் அளவு, ஏதோ மற்ற நாடுகளுடன் ஒப்பிட இந்தியாவுக்குக் குறைவு என்று திருப்திப்பட்டுக் கொள்வதில் கொஞ்சம்கூட பொருளில்லை; ஏனெனில், எப்போது வேண்டுமானாலும், திடீரென ஒருநாள் உறங்கியெழுந்த பொழுதில், அதிபர் டிரம்ப்பால் இந்த வரிவிகிதம் மேலும் மேலும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
டிரம்ப்பின் நடவடிக்கைகள் உலக நாடுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை – ஏற்றுமதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திப் பல வகையிலும் உலகின் பொருளாதார முறைமையையே குலைத்துவிடும் என்பதுதான் மிகவும் அச்சத்துக்குரிய விஷயம். அப்படித்தான் நடந்துகொண்டும் இருக்கிறது.
உலகில் சந்தை மதிப்புமிக்க ஆப்பிள், ன்விடியா, மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், நெட்பிளிக்ஸ், டெஸ்லா ஆகியவை எல்லாமும் அமெரிக்காவைச் சேர்ந்தவையே. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் டாலர்தான் உலகின் செலாவணி. பொருளாதார ரீதியில் வல்லமையுடன் இருந்தபோதிலும்கூட குய்யோ முறையோ என்று எல்லாவற்றையும் குலுக்கிப் போடுவதால் அமெரிக்காவும் அமெரிக்க மக்களும் சேர்ந்துதான் அடிவாங்கப் போகிறார்கள்.
இந்த வரிவிதிப்பிலிருந்து அமெரிக்க நிறுவனங்களேகூட தப்பிக்க வேண்டுமானால் இனி அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளைத் தொடங்கினால்தான் தப்பிக்கும்; அனேகமாக இதுபற்றிய சிந்தனைகளை அவை தொடங்கிவிட்டிருக்கும்.
அமெரிக்க சந்தையை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களே இனி வெளிநாடுகளில் குறைந்த கூலிக்கு வேலைகளைச் செய்ய வைத்துப் பலனைப் பெற முடியாது. இவையெல்லாம் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்று தெரியாது.
இதனிடையே, அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பையும் அதிருப்தியை ஏற்படுத்தி, அவர்களுடைய வாழ்விலும் கடும் நெருக்கடியை உருவாக்கத் தொடங்கியிருக்கிறது டிரம்ப்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள்.
இறக்குமதி வரிகளின் அதிகரிப்பு காரணமாக பொருள்களின் விலைகள் எல்லாம் கடுமையாக உயர்ந்துவிடும் என்பதால் மக்கள் இப்போதே தேவையானவற்றை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், எல்லாவற்றையும் எவ்வாறு ஒருசேர ஒருவரால் வாங்க முடியும்?
நிலைமை இப்படியே தொடர்ந்தால், அமெரிக்காவிலும் விலைகள் உயரும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பணப்புழக்கம் குறையும். வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கும். தவிர, பங்குச் சந்தைகளும் இப்படியே தொடர்ந்து அடிவாங்கினால் அமெரிக்க மக்கள் சேமிப்பதும் பங்குகளில் முதலீடுகள் செய்வதென்பதும் (60 சதவிகித மக்களின் பழக்கம்) படிப்படியாகக் குறைந்து ஒருகட்டத்தில் இல்லாமலே போய்விடவும்கூடும்.
ஹேண்ட்ஸ் ஆஃப்! - தொடாதே! கையை எடு, தூரப் போ, விட்டுவிடு, ... அப்பாலே போ என எப்படி வேண்டுமானாலும் தமிழில் சொல்லிக் கொள்ளலாம். இந்த முழக்கத்தை முன்வைத்து அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆலோசகர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் நாடு தழுவிய அளவில் ஒரே நாளில் 1400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிபர் பொறுப்பேற்று இவ்வளவு விரைவில் இத்தனை மக்கள் எதிர்ப்பு என்பது எதிர்பாராதது எனலாம்.
உள்ளபடியே, உலக நாடுகளின் மிகப் பெரிய இறக்குமதியாளர் அமெரிக்காதான். உலகளாவிய இறக்குமதிகளில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 13 சதவிகிதம். உலகம் முழுவதுமுள்ள அமெரிக்கா தொடர்பான ஏற்றுமதி - இறக்குமதி நாடுகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் இதனால் பாதிக்கப்படும்; சிலவேளை பலன் பெறவும் கூடும்.
இடியாப்பச் சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவில் மக்களிடையே வாங்கும் திறன் குறைந்துபோனால், இறக்குமதிக்கான தேவையே அங்கே குறைந்துபோய் விடும். மென்பொருள்சார் வேலைகள் மட்டுமல்ல; விவசாயம், கட்டுமானத் துறை உள்பட பல கடினமான வேலைகளையும் அதிகளவில் வெளிநாடுகளிலிருந்து வந்திருப்போர்தான் செய்கின்றனர். இன்னொரு பக்கம் இவர்களையும் திருப்பி அனுப்புவதற்கான பணிகளையும் ஏற்கெனவே தொடங்கிவிட்டிருக்கிறார் டிரம்ப்.
அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புகளால் ஏற்றுமதி, ஏற்றுமதிக்கான உற்பத்தி என்று நம்பியுள்ள நாடுகள் – நாடுகளின் நிறுவனங்கள் - ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுவது தவிர்க்க இயலாதது!
இந்தியாவைப் பொருத்தவரை மொத்த ஏற்றுமதியில் (இங்கே தயாரித்து அனுப்பப்படும் கார்கள், போன்கள் போன்றவை உள்பட) 18 சதவிகிதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியின் அளவு குறைந்தால் இங்கேயும் உற்பத்தி குறையும், உற்பத்தி குறைந்தால் வேலைவாய்ப்பு குறையும், பணப்புழக்கம் குறையும், மக்களின் வாங்கும் திறன் குறையும், குறையும்...
சரி, ஏதாவது பயன் இருக்குமா? வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 37 சதவிகிதம் வரி விதிக்கிறது அமெரிக்கா. இந்தியாவிலிருந்து என்றால் 26 சதவிகிதம்தான். எனவே, இந்தியாவிலிருந்து அதிகளவிலான ஆயத்த ஆடைகள், துணிகள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு உருவாகலாம். வேண்டுமானால், இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில் மகிழ்ச்சியோ, எரிச்சலோ பட்டுக் கொள்ளலாம் (ஒட்டுமொத்தமாக விழுகிற அடிகளை மறந்து).
இன்னொரு விதமான ஆபத்தும் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதற்காக சீனா போன்ற நாடுகளில் எந்த நிறுவனமும் உற்பத்தியை நிறுத்திவிடப் போவதில்லை. நிறுத்தினால் அங்கே வேறுவிதமான பொருளாதாரச் சிக்கல்கள் நேரிடும் என்பதால் அவை தொடரும். அவற்றை எங்கே கொண்டுபோய் விற்பது? ஆக, அந்தப் பொருள்கள் அனைத்தும் பெரிய சந்தையான இந்தியா போன்ற நாடுகளுக்குக் குறைந்த விலைக்கேகூட திருப்பிவிடப்படலாம். இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளில் இதேபோன்ற பொருள்களின் உற்பத்தி, விற்பனையில் பெரிய பாதிப்பு நேரிடும். ஏற்கெனவே, விலை விஷயத்தில் சீன உற்பத்திப் பொருள்களுடன் போட்டி போட முடியாமல் இந்தியச் சந்தையில் பல பொருள்கள் திணறிக்கொண்டிருக்கின்றன.
எங்கேயோ அமெரிக்காவில் இடித்த இடியின் முழக்கம், உலகில் எங்கெல்லாமோ பெருங் கலக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது! டிரம்ப்பின் வரி அறிவிப்புகளால் அடுத்தடுத்து இன்னும் என்னவெல்லாம் நடைபெறப் போகின்றனவோ?