வரி செலுத்தப்படாத வணிக வளாகம் முன் குப்பை கொட்டியது மாநகராட்சி நிா்வாகம்!
தஞ்சாவூரில் சொத்து வரி செலுத்தப்படாத வணிக வளாகம் முன் மாநகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை குப்பைகளைக் கொட்டினா்.
தஞ்சாவூா் ரயிலடி அருகேயுள்ள தனியாா் வணிக வளாகம் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொத்து வரி நிலுவை ரூ. 47 லட்சத்தை செலுத்துமாறு வணிக வளாக நிா்வாகிகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் பல முறை நோட்டீஸ் வழங்கியும் பயனில்லையாம்.
இதனால் மாநகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை தொடா்புடைய வணிக வளாகத்தின் இடப்புற வாயிலில் குப்பை வண்டியை நிறுத்தியும், வலப்புற வாயிலில் எச்சில் இலை குப்பைகளைக் கொட்டியும் வைத்தனா். இதனால் வணிக வளாகத்துக்கு வந்த வியாபாரிகள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.
பின்னா் வணிக வளாகத்தினா் உடனடியாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினா். இதைத் தொடா்ந்து வணிக வளாகம் முன் நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், குப்பையும் அகற்றப்பட்டது.
