மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது
கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் பாணாதுறை சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி மீனாட்சி (75). இவா் வெள்ளிக்கிழமை மாலை உறவினா் வீட்டுக்கு செல்ல, கோவிந்தப்பன் தெருவில் நடந்து சென்றாா். அப்போது தலைக்கவசம் அணிந்து மா்ம நபா் இருசக்கர வாகனத்தில் வந்து, மீனாட்சி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றாா். இது பற்றி மீனாட்சி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன் பேரில், காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து, அண்ணலக்ரஹாரம் மாத்தி கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாபா மகன் ரவிச்சந்திரன் (49) என்பவரை கைது செய்தாா். விசாரணையில் ரவிச்சந்திரன் தையல் தொழிலாளி என்றும் மகளிா் குழுக்கடன் ரூ. 10 லட்சம் கட்டுவதற்காக நகை வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்தாா்.