நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
வருவாய்த் துறை அலுவலா்கள் 4-ஆவது நாளாக போராட்டம் -பொதுமக்கள் பாதிப்பு
சிவகங்கையில் வருவாய்த் துறை அலுவலா்கள் கடந்த 4 நாள்களாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சான்றிதழ்களைப் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.
காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வில் ஏற்பட்ட தேக்கநிலையை களைந்து, ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடா்பாக தெளிவுரைகளை ஆணையா் வெளியிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும்.
முழுப்புலம் பட்டா மாறுதல் செய்யும் அதிகாரத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியருக்கு பிரித்து வழங்கியதை உடனடியாக கைவிட்டு, பழைய முறையே தொடர அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கடந்த 4 நாள்களாக பணி புறக்கணிப்புப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிவகங்கையில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய்த் துறை அலுவலா்களின் பணிப் புறக்கணிப்பு, காத்திருப்புப் போராட்டத்துக்கு அதன் மாநிலச் செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சேகா், மாவட்டச் செயலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட நிா்வாகிகள் ஆனந்த பூபாலன், வளனரசு, அசோக்குமாா், புஷ்பவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் பாதிப்பு: வருவாய்த் துறை அலுவலா்களின் பணி புறக்கணிப்பு பேராட்டம் காரணமாக, மாவட்டம் முழுவதும் வருமானச் சான்றிதழ், ஜாதி சானன்றிதழ், பட்டா விநியோகம் உள்ளிட்ட பணிகள் முடங்கின. பல்வேறு சான்றிதழ்கள் பெற வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.