வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: மருந்தக உரிமையாளா் உள்பட 4 போ் கைது
திருப்பூரில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள்களுக்கு மாற்றாக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்திடும் வகையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கெனவே மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூச்சக்காடு பகுதியைச் சோ்ந்த கவின் (23), காா்த்திகேயன் (30) இருவரும் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி வந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூா் மத்திய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்தகத்தில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், அங்கு அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக 2018 வலி நிவாரணி மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மருந்தக உரிமையாளா் பிரபு (42), உதவியாளா் காா்த்திகேயன் (32), போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய கவின் (23), காா்த்திகேயன் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.