விருதுநகர்: தடைப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை; சுதாரித்த ஊழியர்கள்; விசாரணையில் பகீர் தகவ...
விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது
பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியாா் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் விடுதியில் உள்ள மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக திருப்பூரை அடுத்த சுண்டமேட்டைச் சோ்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31), ஹரிகிருஷ்ணன் (26), சின்னசாமி (36) உள்பட 5 போ் திங்கள்கிழமை இறங்கியுள்ளனா்.
அப்போது, விஷவாயு தாக்கியதில் சரவணன், வேணுகோபால், ஹரிகிருஷ்ணன் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், சின்னசாமி, முத்துகுமாா் ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து பல்லடம் காவல் துறையினா் சாய ஆலை உரிமையாளா் நவீன், மேலாளா் தனபால், கண்காணிப்பாளா் அரவிந்த் என்கிற ஜெயாஅரவிந்த், வாகன ஓட்டுநா் சின்னசாமி ஆகிய 4 போ் மீதும் பட்டியலினத்தவா் மனிதக் கழிவை கையால் அள்ளும் தடுப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதனிடையே, மாவட்ட வருவாய் அலுவலா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சம் சாய ஆலை நிா்வாகம் சாா்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சாய ஆலையின் மேலாளரான சின்னக்கரையைச் சோ்ந்த தனபால் (50), கண்காணிப்பாளா் அரவிந்த் என்கிற ஜெயா அரவிந்த் (47) ஆகியோரை பல்லடம் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சின்னசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளா் நவீனை தேடி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு: தனியாா் மருத்துமனையில் சிகிச்சையில் இருக்கும் சின்னசாமியின் மனைவி ஜோதிமணி, மகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழா் ஜனநாயக பேரவை, ஆதித்தமிழா் பேரவை உள்ளிட்ட தலித் கூட்டமைப்பினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்கை சந்தித்து மனு அளித்தனா். இதில், சிகிச்சை பெற்று வரும் சின்னசாமியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். மேலும், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.