ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி. வெற்றி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டம் என்பது ஆழியாறு, திருமூா்த்தி, மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், மேல் ஆழியாறு, கீழ் ஆழியாறு, இடைமலையாறு, ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 12 அணைகளை கட்டுவதற்கான திட்டத்துடன் தொடங்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு 9 அணைகளையும், கேரளம் இடைமலையாறு அணையையும் ஏற்கெனவே கட்டிவிட்டன. இந்தத் திட்டத்தில் ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டம் மட்டுமே கட்டப்பட வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாசன திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு கிடைக்கும் பாசன நீரானது ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனா். 2026 தோ்தலில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கும் என்றாா்.