மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
வல்லநாடு அருகே சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு குறுவட்டம் அருகே ஆலந்தா கிராமத்தில் தனியாா் கல்குவாரிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதற்கு தடை விதித்த காவல் துறையினரைக் கண்டித்து சனிக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது.
ஆலந்தாவில் விவசாய நிலங்களுக்கு அருகே செயல்படும் தனியாா் கல்குவாரியால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதால் கல்குவாரியைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி, அப்பகுதியினா் 2 வாரங்களுக்கு முன்பு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், கல்குவாரிக்கு எதிராக ஆலந்தா பகுதி பொதுமக்கள் சுவரொட்டிகளை ஒட்டினா். இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து சனிக்கிழமை நள்ளிரவு ஆலந்தா - சவலப்பேரி சந்திப்பு பகுதியில் மறியல் நடைபெற்றது.
புளியங்குளம் போலீஸாா், காவல் ஆய்வாளா், தூத்துக்குடி காவல் உதவி ஆணையா் உள்ளிட்டோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்படாததால் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் ரத்னசங்கா் சென்று பேச்சு நடத்தினாா்.
கல்குவாரிக்கு எதிராக பொதுமக்கள்அளிக்கும் புகாரின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கு விதிமீறல்கள் இருந்தால் மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.