Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதே...
வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!
வளர்ப்பு நாய்கள் நகத்தால் சீண்டினாலும் ரேபிஸ் வரலாம்; ஆகவே, எச்சரிக்கை அவசியம் என்பதை அண்மையில் குஜராத்தில் நிகழ்ந்ததொரு துயர சம்பவம் எடுத்துரைக்கிறது.
குஜராத் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வன்ராஜ் மஞ்சாரியா என்பவர் தமது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயை வளர்த்து வந்துள்ளார். தன் வீட்டின் ஒரு குடும்ப உறுப்பினராக அவர் பாவித்து வளர்த்து வந்த அந்த செல்லப் பிராணிக்கு அவர் சரிவர தடுப்பூசியும் செலுத்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அவரது உடலில் நாயின் நகம் பட்டு காயம் உண்டாகியுள்ளது. ஆனால் அதை அவர் பெரிதக எடுத்துக்கொள்ளவில்லை. உரிய தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நாய் நகத்தால் சீண்டிய சில நாள்களிலேயே திடீரென அதிகப்படியான காய்ச்சல், தண்ணீரைக் கண்டாலே ஒருவித அச்ச உணர்வும் நடுக்கமும் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. மேற்கண்ட அறிகுறிகள் ரேபிஸ் தொற்று உடலில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதையே காட்டுகின்றன.
இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரேபிஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவ கன்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த காவல்துறை அதிகாரியொருவர் வளர்ப்பு நாயின் நகம் சீண்டியதால் உடலில் காயம் ஏற்பட்டதுடன் அதனால் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்திருக்கும் சம்பவம் செல்லப் பிராணிகளை வளர்க்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் மட்டும் ரேபிஸ் போன்ற நோய்த் தொற்று ஏற்படாது என்று 100 சதவீதம் உறுதியாக உத்தரவாதம் அளித்துவிட முடியாது. பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். எனினும், அவ்வகை விலங்குகள் கடித்தாலோ சீண்டினாலோ, அதன்மூலம் காயம் உண்டானாலோ உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.