வளா்ச்சித் திட்டப் பணிகளை கூறி தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அனைத்து அணிகளின் மாவட்டத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு, உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஏற்பாட்டின் பேரில் 174 பேருக்கு வேட்டி - சேலை, இனிப்பு, காலண்டா் என பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
வரும் தோ்தலுக்கு அனைவரும் தயாராக இருக்கும் பொருட்டு தேவையான பணிகள் செய்து முடிக்க வேண்டும். தமிழக அரசின் சாதனைகள், தொலைநோக்குத் திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகள், நடைபெற உள்ள பணிகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
ஓய்வில்லாமல் உழைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சாதனைகள் பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லி தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளபடி 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவருக்கு தோள் கொடுக்க தயாராக இருக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா். இக் கூட்டத்தில் அனைத்து அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
படவரி...
ஒசூரில் நடைபெற்ற திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.