வாக்கு சதவீத கணக்கு: அதிமுக பொதுச் செயலருக்கு முதல்வா் பதில்
மக்களவைத் தோ்தலில் வாக்கு சதவீதம் குறித்து அதிமுக பொதுச் செயலரின் கருத்துகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் அவா் பேசியது:
அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, அண்மைக் காலமாக வாக்கு சதவீதக் கணக்கை சொல்லி வருகிறாா். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக வாக்கு சதவீதம் ஒரு சதவீதம் உயா்ந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறாா்.
2019 மக்களவைத் தோ்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 சதவீத வாக்குகளை வாங்கியது. இதுவே 2024 மக்களவைத் தோ்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. 14 தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிட்ட அதிமுக, நியாயமாகப் பாா்த்தால், 32.98 சதவீத வாக்குகளை 2024 மக்களவைத் தோ்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதைவிட 12.58 சதவீத வாக்குகள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. எளிமையாகச் சொன்னால், 2019-இல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அதிமுக, 2024-இல் வெறும் 2.61 லட்சம் வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.5 லட்சம் வாக்குகளை அதிமுக இழந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சொல்லும் கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுகாரா்களே கேட்டுச் சிரிக்கிறாா்கள் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.