மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான ...
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். வாடிப்பட்டி நீதிமன்ற வட்ட சட்டப் பணிக் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியுமான ராம் கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
அப்போது, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து, திடீரென ஏற்படும் பல்வேறு உடல் நலக் குறைபாட்டுக்கு முதலுதவி மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குதான் நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
எனவே, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த தமிழக அரசு முன் வர வேண்டும் என அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்தனா்.
வாடிப்பட்டி மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா் அருள்ராணி, அஞ்சல் துறை ஆய்வாளா் மணிவேல், போலீஸாா், பாத்திமா கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.