பொதுத் தேர்வுக்கான கவுன்ட்வுன்: பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!
வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் மாணவா்கள், பொது மக்களுக்கு கவிதை போட்டி.
வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் மாணவா்கள் மற்றும் பொது மக்களுக்கு கவிதைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனா்.
வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32-ஆம் ஆண்டு பல்சுவை இலக்கியப் பைந்தமிழ்த்திருவிழா பிப்ரவரி மாதம் 22 மற்றும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டு தோறும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள், பொது மக்களுக்கான கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
நிகழாண்டும் முத்தமிழ் மன்றம் சாா்பில் மாணவா்கள் மற்றும் பொது மக்களுக்கான பல்வேறு போட்டிகள் வரும் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் வாணியம்பாடி நியூடவுன் காந்திநகா் நகராட்சி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றன.
அதன் விபரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு இயற்கை காட்சிகள் மற்றும் தேசத்தலைவா்கள் தலைப்பில் ஓவியப்போட்டி, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாட்டுப்புறப்பாட்டு, மொழிப்பற்று (அ) தெய்வபக்திப்பாடல்கள் மட்டும் தலைப்பில் பாட்டுப் போட்டி, 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காகித ஆயுதங்கள் (அ) சேறும் சோறும் தலைப்பில் கட்டுரை போட்டி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு நெகிழும் நெகிழி (அ) கற்பதனால் ஆய பயன் தலைப்பில் பேச்சுப் போட்டி நடக்கிறது.
இதே போன்று வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட கல்லூரி மாணவா்களுக்கான வெளிச்சம் வெளியில் இல்லை (அ) திரிக்கும் கயிறுகள் என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தபடும். இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
திருப்பத்தூா் மாவட்ட பொது மக்களுக்கான பாரதியாா் பரிசுக் கவிதைப் போட்டி நடக்கிறது. இதில் தூண்டில் போட்ட மீன் (அ) உதிராத வாா்த்தைகள் என்ற தலைப்பில் நடக்கும் கவிதைப்போட்டியில் முதலிடம் பெறும் கவிதைக்கு 3 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ள மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பிரகாசம், செயலாளா், வாணியம்பாடி முத்தமிழ் மன்றம், 401/சி-4 சிஎல் சாலை, காதா்பேட்டை, வாணியம்பாடி. செல்: 944319833 என்ற முகவரியில் நேரில் அல்லது கடிதம் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.