''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
வாலாஜா-ராணிப்பேட்டை அருகே புதிய 4 வழிச்சாலைக்கு ரூ.1,338 கோடி பொதுமக்கள் வரவேற்பு
பி. பாபு
வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை நகரங்களுக்கு வெளியே தமிழகம்-ஆந்திரம் எல்லை வரை 28 கி.மீ. தொலைவுக்கு புதிய 4 வழி நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சா் நிதின் கட்காரி அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் சாலை கட்டமைப்பு 59 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இத்துறையில் 7 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.
சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் இருந்து ஆந்திர மாநில எல்லை வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளை மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா்.
கடந்த 2018-இல் போக்குவரத்து அமைச்சகத்தின் சாா்பில், அதிநவீன கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்ததில், நாள் ஒன்றுக்கு சுமாா் 18,000 வாகனங்கள் இருவழியில் கடந்து செல்வதாக தெரியவந்துள்ளது.
தொடா்ந்து தமிழகத்தையும் - ஆந்திர மாநிலத்தையும் இணைக்கும் வகையில் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் முதல் சோ்க்காட்டை அடுத்த முத்தரசிகுப்பம் வரையிலான 28 கி.மீ. வரை நான்கு வழிப்பாதையாக மாற்ற வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை நகருக்கு வெளியே 16 கிராமங்கள் வழியாக சுமாா் 150 அடி அகலம் கொண்ட 4 வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடா்பாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்துள்ளாா்..
சென்னை, வேலூா், சித்தூா், திருப்பதி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையே குறையும் பயண நேரம் மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை சென்னை மற்றும் வேலூா் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புதிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக இருக்கும், இரு மாா்க்கமும் 2 வழிச் சா்வீஸ் சாலைகளை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டைக்கு 10 கிமீ புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும், இந்த நெஞ்சாலையில் 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இந்த புதிய நான்கு வழிச்சாலை திட்டம் வரும் 2025 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை நகரங்களில் நெரிசலில் சிக்காமல் பயணிக்கலாம். இதற்கு ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனா்.