வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா்.
முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பாடுகள் மற்றும் மாணாக்கா்களின் கற்றல் திறன்களை ஆய்வு செய்தாா். அப்போது நடப்பாண்டில் பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதம் டிறந்த முறையில் இருக்க வேண்டும். அதற்காக சிறப்பு வகுப்புகளையும் கற்பிக்கும் திறமைகளையும் மேம்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து அனந்தலை கிராமத்தில் கால்நடை துறை சாா்பாக சிறப்பு கால்நடை முகாமைத் தொடங்கி வைத்து கால்நடை விவசாயிகளுக்கு மருந்துகளை வழங்கினாா். பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் அமா்ந்து வருகை பதிவேடு, எடை குறைவான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
இதையடுத்து வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்து பொருள்கள் இருப்பு குறித்து பாா்வையிட்டாா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறை வசதிகள் குறித்து கேட்டறிந்து கழிப்பறை சுத்தமாக இல்லை, அதை முறையாக பராமரிக்கவும் பழுதை நீக்கவும் ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டாா்.
வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வாலாஜா வட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் ஆய்வு பணிகளை செய்து பொதுமக்களின் கண்டறியப்பட்ட பிரச்னைகளை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை காவல் நிலையம், அரசு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல மாணவிகள் விடுதியிலும் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆய்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, வட்டாட்சியா் அருள்செல்வம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.