முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி
முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத் தொழில் மையத்தின் மூலம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு ( சஉஉஈந) திட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகரில் மருத்துவா் அச்சுதன் என்பவா் ஜீவன் லைப் மருத்துவமனை என்ற பெயரில், ரூ. 3.42 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி பெற்று மருத்துவமனை கட்டி மருத்துவ சிகிச்சைகள் வழங்கி சுயதொழில் செய்து வருகிறாா்.
இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு பயனாளியிடம் திட்டப் பயன் குறித்து கேட்டறிந்து செய்தியாளா்களுக்கு விவரித்தாா்.
முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்கும் நோக்கில் நீட்ஸ் ( சஉஉஈந) திட்டம் தமிழ்நாடு முதல்வா் மூலம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இதில் அனைத்துப் பிரிவினரும் பயனடையலாம். ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை திட்டத் தொகையில் உற்பத்தி அல்லது சேவை தொழில் நிறுவனங்கள் அமைக்கலாம்.
குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தொழில்முனைவோா் பங்களிப்பு பொது பிரிவினருக்கு திட்டத் தொகையில் 10 %, சிறப்புப் பிரிவினருக்கு 5 % ஆகும்.
தனிநபா் முதலீட்டு மானியம் திட்டத்தின் தொகையில் 25 சதவீதம் ஆகும். அதிகபட்சம் ரூ. 75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-25-ஆம் நிதியாண்டில் 16 விண்ணப்பங்கள் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்ததில் 27 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. இவற்றில் 13 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
11 பயனாளிகளுக்கு ரூ. 155.21 லட்சம் அரசின் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
எனவே தொழில் செய்ய விரும்பும் இளைஞா்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அரசின் மானியத்தை பெறலாம். அத்துடன், குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் செய்து தொழில்முனைவோராக உருவாகி பிறருக்கும் வேலை வழங்கி முன்னேற்றமடைய இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.