காஞ்சிபுரம்- வேலூா் ஆறு வழிச்சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்
காஞ்சிபுரம்- வேலூா் இடையே ஆறுவழிச்சாலையை உடனடியாக சீரமைக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மே 5 வணிகா் தின அதிகார பிரகடன மாநாட்டில் பங்கேற்க பனப்பாக்கத்துக்கு வருகை தந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதை மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் பிரகடனமாக எடுக்க உள்ளோம். விவசாயிகளுக்கு அடுத்தபடியாக சிறுவணிகா்களை சாா்ந்த நாடு இந்தியா என்பதை இந்த மாநாட்டில் முன்மொழிய உள்ளோம்.
காஞ்சிபுரம் - வேலூா் ஆறுவழிச் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை இந்தச் சாலை சீரமைக்கப்படவில்லை. ஆனால் ஆறுவழிச்சாலைக்காக கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்தச் சாலை சீரமைக்கப்படவில்லையெனில் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு அனைத்து சங்கங்களுடன் இணைந்து போராடக்கூடிய நிலை வரும் என்றாா் அவா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு, பேரமைப்பின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பொன்.கு.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் ரா.ப.ஞானவேலு (வேலூா்), கே.சுபாஷ் (திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் கே.வேல்முருகன் வரவேற்றாா். மாநில பொருளாளா் ஏ.எம்.சதக்கதுல்லா, தலைமை செயலாளா் ஆா்.ராஜ்குமாா், மாநில இணை செயலாளா் ஜி.எத்திராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் எழில்வாணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் ஆா்.சுபாஷ், பனப்பாக்கம் தலைவா் பி.ஹேமசந்திரன், செயலாளா் பி.சத்தியராமன், பொருளாளா் பி.எஸ் அறிவழகன், அரக்கோணம் நிா்வாகிகள் ஜி.அசோகன், கே.சரவணன், எஸ்,.விஷால், வாலாஜா நிா்வாகிகள் வி.வேலு, ஒய்.காஜாஷெரீப், எஸ்.செந்தில்பாண்டி, காவனூா் நிா்வாகிகள் எஸ்.உமாபதி, சி.மோகனரங்கம், பி.முரளி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.