மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
வாழப்பாடியில் கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
வாழப்பாடி: வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொதுமக்களைக் கடித்தும், சாலையில் குறுக்கிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தியும் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வாழப்பாடி பகுதியில் இறைச்சிக் கடைகள் அதிகம் உள்ளதால் கடைவீதிகள், குடியிருப்புப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரவு பகலாக கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. தற்போது நாய்களின் இனப்பெருக்க காலம் என்பதால் தெருநாய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளன. கூட்டமாக உலாவும் தெருநாய்கள், குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து குழந்தைகள், பொதுமக்களை விரட்டியும் கடித்தும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி சாலைகளில் உலவும் தெருநாய்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை ஆவேசத்தோடு துரத்திக் கடிக்கச் செல்வதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.
சாலைகளில் குறுக்கே நாய்கள் கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடுவதால், நாய்கள் மீது மோதி வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இதனால், வாழப்பாடியில் நாய்க்கடி மற்றும் விபத்துகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே, வாழப்பாடிபேரூராட்சியில் சிறப்பு முகாம் அமைத்து தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யவும், பொதுமக்களைக் கடித்து துன்புறுத்தும் வெறி நாய்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தவும் பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, சேலம் மாவட்ட ஆட்சியா் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோா் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி அறிவுறுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.