ராஜீவ் காந்தி `ஸ்கெட்ச்’ - செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக-வில் இணைந்த கோவை ந...
வாழப்பாடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பது எப்போது?
வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த பழைய கட்டடத்தில் இயங்கி வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலங்களுக்கு, வேளாண், உழவா் நலத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க, தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகள் மற்றும் வாழப்பாடி, பேளூா் பேரூராட்சி பகுதியை சோ்ந்த விவசாயிகள், அரசு மானியத்தில் விதைகள், இடுபொருட்கள் வாங்கவும், வேளாண்மை சாா்ந்த அரசு சலுகைகளுக்கு விண்ணப்பிக்கவும், பயிா்சாகுபடி குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்களின் ஆலோசனைகள், பயிற்சிகள் பெறவும் வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனா்.
30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத பழைய கட்டடத்திலேயே, வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகங்கள், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலகம், இடுபொருட்கள், விதைகள் பாதுகாப்பு அறை ஆகியவை இடநெருக்கடியில் இயங்கி வருகின்றன.
இந்த கட்டடமும் தற்போது பழுதடைந்து கிடக்கிறது. விவசாயிகள் வந்து செல்வதற்கு போதிய படிக்கெட்டுகள் கூட இல்லாததால், வேளண் அலுவலகத்திற்கு விதைகள், இடுபொருட்கள் வாங்கச் செல்லும் விவசாயிகள், பாரத்தோடு தடுமாறி விழுந்து வருகின்றனா்.
எனவே, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மற்ற ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்கள், விதை இடுபொருட்கள் பாதுகாப்பு கிடங்குகள், பயிற்சி கூடம், விற்பனை நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க சேலம் மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி வட்டார விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட பாமக உழவா் பேரியக்க நிா்வாகி, வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினா் மாரியம்மன்புதுாா் உழவன் ரா.முருகன் கூறியதாவது:
‘சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், வாழப்பாடியில் பழுதடைந்த குறுகலான கட்டத்திலேயே, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலங்கள் இயங்கி வருகின்றன. இதனால், பயிற்சி மற்றும் ஆலோசனை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் வந்து செல்வதற்கு வசதியான வகையில், வாழப்பாடியில் நிலம் தோ்வு செய்து, அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க சேலம் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.