முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி வி...
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!
வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்துக்கு வெளியே வைத்து மர்ம நபர் சுட்டுக் கொன்றுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்துக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட இரண்டு தூதரக ஊழியர்களின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சிகாகோவைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்பவர் என்று கூறப்படுகிறது. அருங்காட்சியத்துக்கு வெளியே பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை ’யூத எதிர்ப்பு பயங்கரவாதம்’ எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேலிய தூதர் டேனி டானன், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ”யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலைகளை இப்போதே முடிவுக்கு கொண்டு வரவேண்டும். வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கொலை நடந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.