முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியின் உடல்!
இந்திய அணுசக்தி துறையின் மிக மூத்த அறிவியலாளரான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 - ம் தேதி விடியற்காலை ஊட்டியில் உயிரிழந்தார். 95 வயதில் காலமான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர். இந்திய அணுசக்தி துறையில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் விளங்கியவர்.

1955 -ம் ஆண்டு அணுசக்தித் துறையில் இணைந்த இவர், இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சரா கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றியவர். ஆகஸ்ட் 1959 -ல் இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டவர். 1967- ல் மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றவர்.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகளை வகித்து வந்த இவர், 1974 - ம் ஆண்டு அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984- ல் அணுசக்தி வாரியத்தின் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.
1987 - ம் ஆண்டில் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) நிறுவனர்- தலைவராகவும் ஆனார்.

அவரது தலைமையின் கீழ் அப்போது 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன. எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் அறிவியல் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டனில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றிருந்த நிலையில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். 30 குண்டுகள் முழங்க காவல்துறையினர் வீர வணக்கம் செலுத்தி விடை கொடுத்தனர்.