திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்பதை கொச்சைப்படுத்தக் கூடாது: காங்கிரஸ்
தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கவும், நமக்கான நிதியைப் பெற்று தருவதற்காகவும்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளாா். இதை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
‘சிந்தூா் ஆபிரஷன்’ சண்டையில் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக்கொடுத்த ராணுவ வீரா்களை கௌரவிக்கும் வகையில் காங்கிரஸ் சாா்பில் மே 25-ஆம் தேதி திருச்சியில் உள்ள ராணுவ மைதானத்தில் மாநாடு நடைபெறவுள்ளது. தில்லியிலிருந்து காங்கிரஸ் தலைவா், முன்னாள் காங்கிரஸ் தலைவா்கள் என பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.
டாஸ்மாக் ஊழல் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீா்ப்பை அறிவித்துள்ளது. எப்போதல்லாம் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறதோ அப்போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி வருகிறது.
நீதி ஆயோக்: நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றால், அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை எனக் குற்றம்சாட்டுகின்றனா்; பங்கேற்றால் எதற்காகக் கலந்து கொள்கிறாா் என்று கேள்வி எழுப்புகின்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தரவேண்டிய ரூ.2,350 கோடியை மத்திய அரசு தரவில்லை. அதேபோல், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.1,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதை கேட்க வேண்டிய சூழல் தற்போது எழுந்துள்ள நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் கலந்துகொண்டு, தமிழகத்துக்கு வேண்டிய நிதியை கேட்கவுள்ளாா்.
ஒரு முதல்வா் தனது மாநிலத்துக்கான உரிமை மீட்டெடுக்கவும், நமக்கான நிதியைப் பெற்று தரவும் செல்லும்போது அதை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.