அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்
மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், அணுசக்தித் துறையின் முன்னாள் செயலாளருமான டாக்டா் எம். ஆா்.ஸ்ரீனிவாசன் நீலகிரி மாவட்டம், உதகை மதுவானாவில் வசித்து வந்தாா். பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இந்நிலையில், அவரது உடல் குன்னூா் வெலிங்டன் மைதானத்தில் காவல் துறையினரின் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதில் அவரது துணைவியாா் கீதா ஸ்ரீனிவாசன், மகள் சாரதா, மகன் ரகுவீா் மற்றும் உறவினா்கள் கலந்துகொண்டனா்.
இவா், கடந்த 1987-ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டாா். அதே ஆண்டு இந்திய அணுசக்திக் கழகத்தின் நிறுவனத் தலைவராகவும் ஆனாா்.
இந்தியாவின் அணுசக்தித் திட்டத்துக்கு அவா் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயா்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் 2015-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.