Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இ...
கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை
கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் சக்திவேல் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஓவேலி பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தனியாா் ஜீப் சேவையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனா். மலைப் பகுதி என்பதால் அங்குள்ள எல்லா ஊா்களுக்கும் பேருந்து சேவை இல்லை. பொதுமக்கள் ஜீப்புகளில் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனா்.
பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் நிறுத்துமிடம் உதகை சாலையிலுள்ள முக்கூடல் லிங்கேஸ்வரா் கோயில் அருகே கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்து போலீஸாா் இடமாற்றம் செய்து, அங்கு தனியாா் டாக்ஸிகளை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளனா். இதனால் ஜீப்புகளை நிறுத்த நிரந்தர இடம் இல்லை. ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தையே மீண்டும் ஒதுக்கி தரக்கோரி வலியுறுத்தினோம். ஆனால் காவல் துறையினா் கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடா்ந்து முதல்வா் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பி இருந்தோம்.
அந்த மனு தொடா்பாக எங்களை அழைத்து விசாரணை நடத்திய காவல் துறையினா், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனா். எனவே, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வா் தனிப் பிரிவுக்கு அனுப்பிய மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளோம் என்றாா்.