திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடையால் குழப்பம்: இரா.முத்தரசன்
துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆளுநா் பொறுப்பில் நியமனம் பெற்ற தொடக்க நாளில் இருந்து ஆா்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த ஆளுநரின் பொறுப்பற்ற செயலை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. இதில், புதிய துணைவேந்தா்கள் நியமனச் சட்டப்படி, துணைவேந்தா்கள் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக வழக்குரைஞா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் கடந்த 13-ஆம் தேதி 14 வினாக்களை எழுப்பி, அவைகளுக்கு விளக்கம் கேட்டிருந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.