சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
சீனாவின் குயிசூ மாகாணத்தின் இருவேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் 19 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயிசூ மாகாணத்தின் சாங்க்ஷி மற்றும் குவோவா ஆகிய பகுதிகளில் இன்று (மே 22) அதிகாலை 3 மணி மற்றும் 8 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதில், சாங்க்ஷியில் 2 பேரும், குவோவாவின் கிங்யாங் கிராமத்தில் சுமார் 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் நிலச்சரிவினுள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், சுமார் 19 முதல் 21 பேர் நிலச்சரிவினுள் சிக்கி மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வெளியான தகவலினால் அப்பகுதி முழுவதும் அந்நாட்டு காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் லைஃப் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் நிலச்சரிவினுள் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.
குவோவா நகரம் முழுவதும் செங்குத்தான சரிவுகள் மற்றும் மலைப்பகுதிகளாக உள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணியளவில் குயிசூ மாகாண அரசு, புவியியல் பேரழிவுகளுக்கான இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.
ஆனால், சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், இன்று காலை 11 மணியளவிலேயே, புவியியல் பேரழிவுகளுக்கான அவசரகால பதிலை மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலையாக உயர்த்தியதுடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க:வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!