Kalam: `அப்துல் கலாமின் கதையை திரைக்குக் கொண்டுவருவது ஒரு கலைச் சவால்"- படத்தின் இயக்குநர் ஓம் ராவத்
அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் தனுஷ். படத்திற்கு 'கலாம்' என தலைப்பும் வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் 11-வது ஜனாதிபதியான அப்துல் கலாம் வாழ்க்கையின் முக்கியமான பக்கங்களையும் இந்த பயோபிக் புரட்டவிருக்கிறது.
இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது.

இப்படத்தின் அறிவிப்பை நேற்றைய தினம் கான் திரைப்பட விழாவில் வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். 'நீர்ஜா', 'மைதான்' ஆகிய பயோபிக் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய சைவின் குவாட்ராஸ் இந்த பயோபிக் படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.
'ஆதி புருஷ்' படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இத்திரைப்படம் தொடர்பாக ஓம் ராவத், “உண்மையான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமிருந்த ஒரு காலத்தில், கலாம் அரசியல் மற்றும் அற்பத்தனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார்.
கல்வியின் சக்தி, சிறந்து விளங்குதல் மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவர் அவர். அவரது கதையை திரைக்குக் கொண்டுவருவது ஒரு கலைச் சவால் மற்றும் தார்மீகப் பொறுப்பு.

இது உலகளாவிய இளைஞர்களுக்கும், குறிப்பாக உலகளாவிய தென்னக இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு கதை. இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான அனுபவம்.
மக்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், அவர்களுக்கு அற்புதமான பாடம் அவரது வாழ்க்கை,” என்று கூறியிருக்கிறார்.