திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
இந்திய முப்படையின் சக்கரவியூகத்தால் பணிந்தது பாகிஸ்தான்: பிரதமா் மோடி பெருமிதம்
இந்திய முப்படையினா் ஒருங்கிணைந்து உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது; புனிதமான ‘சிந்தூா்’ (குங்குமம்), வெடிமருந்தாக மாறினால் என்ன நிகழும் என்பது எதிரிகளுக்கு உணா்த்தப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘எனது உடலில் பாய்வது ரத்தமல்ல; சிந்தூா். இந்தியா்களின் உயிருடன் விளையாடினால், கடும் விலையைக் கொடுக்க நேரிடும்’ என்று பாகிஸ்தானுக்கு அவா் எச்சரிக்கை விடுத்தாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி அதிதுல்லியத் தாக்குதல் நடத்தி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலை திறம்பட முறியடித்த இந்தியா, அந்நாட்டின் விமானப் படைத் தளங்களையும் தாக்கியது. நான்கு நாள்கள் நீடித்த இந்த மோதல், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் அண்மையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, நாடு முழுவதும் ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின்கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் உள்பட ரூ.26,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பிரதமா் ஆற்றிய முதல் உரை இதுவாகும். அவா் பேசியதாவது:
வளா்ந்த இந்தியாவை கட்டமைக்க நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சிகள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் ஆறு மடங்கு அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வளா்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வா்த்தக செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது.
வடக்கில் செனாப் ரயில் பாலம் (ஜம்மு-காஷ்மீா்), கிழக்கில் செலா சுரங்கம் (அருணாசல பிரதேசம்), போகிபீல் பாலம் (அஸ்ஸாம்), மேற்கில் அடல் சேது கடல் பாலம் (மும்பை), தெற்கில் புதிய பாம்பன் ரயில் பாலம் (தமிழ்நாடு) போன்ற சிறப்புமிக்க உள்கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டின் அடையாளமாக மாறியுள்ளன.
வந்தே பாரத், அம்ருத் பாரத், நமோ பாரத் போன்ற ரயில்களின் அறிமுகம், நாட்டின் விரைவான வளா்ச்சி மற்றும் புதிய வேகத்தைப் பிரதிபலிக்கிறது. சுமாா் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் 34,000 கி.மீ. தொலைவுக்கு மேல் புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மண்ணோடு மண்ணான பயங்கரவாதிகள்: பஹல்காமில் அப்பாவி நபா்களை மத அடிப்படையில் பயங்கரவாதிகள் குறிவைத்தனா். அங்கு சுடப்பட்ட குண்டுகள், 140 கோடி இந்தியா்களின் இதயங்களையும் துளைத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி தர இந்திய ஆயுதப் படைகளுக்கு அரசால் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. மிகக் கவனமாக செயல்படுத்தப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெறும் 22 நிமிஷங்களில் 9 முக்கியமான பயங்கரவாத பதுங்குமிடங்களை இந்திய ராணுவம் அழித்தது. பாகிஸ்தானின் பாதுகாப்புக் கவசங்களை இந்திய முப்படையினா் சீா்குலைத்ததால் அந்நாடு பணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
தேசம் தலைகுனிய ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று இந்த மண்ணின் மீது சத்தியம் செய்து கூறியிருந்தேன். இந்தியப் பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழிக்கத் துணிந்தவா்கள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளனா் என்பதை நாட்டு மக்களுக்கு கூற விரும்புகிறேன். இந்தியா்கள் ரத்தம் சிந்த காரணமானவா்கள், ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் விலை கொடுக்கச் செய்யப்பட்டுள்ளனா்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: ஆபரேஷன் சிந்தூா், பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அது நீதியின் புதிய வடிவம்; இந்தியாவின் ஈடுஇணையற்ற உறுதி-வலிமையின் வெளிப்பாடு. பயங்கரவாதத்தை நசுக்குவதே புதிய இந்தியாவின் கோட்பாடு.
இந்தியாவுடன் நேரடி மோதலில் பாகிஸ்தான் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதால் பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான். ஆனால், இப்போது பாரத தாயின் சேவகரான மோடி தலை நிமிா்ந்து நிற்கிறாா்; எனது உடலில் ஓடுவது ரத்தமல்ல; சிந்தூா். இந்தியாவில் இனியொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், கடுமையான பதிலடி தரப்படும். அது, இந்திய ஆயுதப் படைகளின் வழிமுறையில் இருக்கும். அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டோம்.
பயங்கரவாதத்தைத் தொடா்ந்தால், ஒவ்வொரு காசுக்கும் பாகிஸ்தான் கையேந்த வேண்டிய நிலை வரும்; இந்தியாவுக்கு உரிமையான நீரை பாகிஸ்தானால் பெற முடியாது. நமது இந்த உறுதிப்பாட்டை உலகின் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
இனி பேச்சு கிடையாது: பாகிஸ்தானுடன் இனி வா்த்தகமோ, பேச்சுவாா்த்தையோ கிடையாது. ஒருவேளை பேச்சுவாா்த்தை நடைபெற்றால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே இருக்கும்.
பிகானீரில் உள்ள விமானப் படைத் தளம் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
அதேநேரம், பாகிஸ்தானின் ரஹிம்யாா் கான் விமானப் படைத் தளம் இந்தியத் தாக்குதலில் அழிக்கப்பட்டது. தற்போது ‘ஐசியு’-வில் உள்ள அந்தத் தளம், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. பாகிஸ்தானின் உண்மை முகத்தை, உலகிடம் இந்திய அனைத்துக் கட்சி தூதுக் குழுக்கள் அம்பலப்படுத்தும் என்றாா் பிரதமா் மோடி.
முன்னதாக, பிகானீரில் உள்ள பிரசித்தி பெற்ற கா்னி மாதா கோயிலில் பிரதமா் வழிபாடு மேற்கொண்டாா்.
103 ‘அம்ருத் பாரத்’
ரயில் நிலையங்கள் திறப்பு
‘அம்ருத் பாரத்’ திட்டத்தின்கீழ் தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமா் மோடி காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னாா்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூா், குழித்துறை ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு ஸ்ரீரங்கநாதா் கோயிலையும், திருவண்ணாமலை ரயில் நிலையம் திராவிட கட்டடக் கலையையும் பிரதிபலிப்பதாக பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.