இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்
‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவ தாக்கி அழித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தானில் உயிரிழந்ததாக கூறப்படும் பொது மக்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபராபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் ஷாபாஸ், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், எந்த நேரமும் மிக அபாகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்.
பஹல்காம் தாக்குதல் தொடா்பாக சா்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தது. அதை ஏற்காமல், பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியது. நாமும் உரிய பதிலடி கொடுத்தோம்’ என்றாா்.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு (பாகிஸ்தான் ரூபாய்) ரூ.1 கோடியும், காயமடைந்தோருக்கு ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரையும் ஷாபாஸ் வழங்கினாா்.
‘சண்டை நிறுத்தம் நீடிக்கிறது’
‘இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நீடிக்கிறது’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தாா் தெரிவித்தாா்.
சீன சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, இஸ்லாமாபாதுக்கு வியாழக்கிழமை திரும்பிய அவா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.
அப்போது, ‘இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா்கள் வாயிலாக சுமுக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்தம் நிறுத்தப்படவில்லை. அது தற்காலிக ஏற்பாடல்ல’ என்றாா்.