உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெறக்கூடிய அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கான உறுதியான திட்டமிடல் எதுவும் தற்போதைக்கு இல்லை. இது தொடா்பாக இரு தரப்பினரும் சோ்ந்து இனிதான் முடிவெடுக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் போா் தொடங்கிய கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த வாரம் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தின.
இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்த இந்தப் பேச்சுவாா்த்தையில், ரஷியாவும் உக்ரைனும் தலா 1,000 போா்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன. இது இதுவரை இல்லாத மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாகும். இருப்பினும், இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்த சந்திப்பு குறித்து எந்த உறுதியான ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் ரஷியாவும் உக்ரைனும் ட்ரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன (படம்). புதன்கிழமை இரவு மட்டும் ரஷியா 105 உக்ரைன் ட்ரோன்களையும், உக்ரைன் 128 ரஷிய ட்ரோன்களையும் சுட்டுவீழ்த்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அடுத்த நேரடி பேச்சுவாா்த்தை குறித்து இன்னும் திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.
