பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
பஞ்சாப் அணைப் பாதுகாப்புக்கு மத்தியப் படை: மாநில முதல்வா் கடும் எதிா்ப்பு
பஞ்சாப் மாநிலம் நங்கல் அணைப் பாதுகாப்புக்கு 296 மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களை ஈடுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு அந்த மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே, மாநில காவல் துறையினா் அணைக்கு உரிய பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை காவல் துறையை அவமதிக்கும் செயல் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
நங்கல் அணையில் இருந்து நீரைப் பெறுவது தொடா்பாக அண்டை மாநிலங்கலான பஞ்சாப்-ஹரியாணா இடையே பிரச்னை உள்ளது. தங்கள் பகுதியில் வறட்சி நிலவுதால் கூடுதல் நீரைத் திறக்க வேண்டும் என்பது ஹரியாணாவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதனை ஏற்க பஞ்சாப் மறுத்துவிட்டது.
இதையடுத்து, பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை ஹரியாணா அணுகியது. அங்கு நதிநீா் பகிா்வில் தொடா்புடைய பிற மாநிலங்கள் ஹரியாணாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், பஞ்சாப் மட்டும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், வாரிய முடிவுப்படி தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நங்கல் அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், சங்ரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இது தொடா்பாக கூறியதாவது:
பக்ரா அணைப் பாதுகாப்புக்கு 296 தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்களைக் குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செலவாக ஆண்டுக்கு ரூ.8.58 கோடியை பஞ்சாப் அரசு அல்லது பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பஞ்சாப் காவல் துறையினா் அணைக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் மத்திய அரசு ஏன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது? மாநில காவல் துறை மீது அவா்களுக்கு நம்பிக்கை இல்லையா? நாங்கள் ஏன் பணம் கொடுத்து மத்திய படையை அமா்த்த வேண்டும். இது அணை நீரில் பஞ்சாபின் உரிமையைப் பறிக்கும் செயலின் முதல்படி என்று குற்றஞ்சாட்டினாா்.