விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கும் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர் ஆகிய மூவரும் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி(4). இவா், அங்குள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தாா். கடந்த 3-ஆம் தேதி மதியம் உணவு இடைவேளையின்போது சக மாணவ, மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த லியாலட்சுமி, பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பள்ளித் தாளாளா் எமல்டா, முதல்வா் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனா். உடல்நலக் குறைவால் தாளாளா், முதல்வா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மட்டும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளித் தாளாளா் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற முதன்மை அமர்வு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.