வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்
விஜய் மீதான நம்பிக்கை கேள்விக்குறி! துரை வைகோ எம்.பி.
தவெக தலைவா் விஜய் பொத்தாம் பொதுவாகப் பேசி வருவது அவா் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறினாா்.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
திருச்சியில் ரயில்வே பணிகள், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தொடா்ந்து கண்காணித்து வருகிறேன். திருச்சியில் கடந்த பத்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ஏா் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, இண்டிகோ விமான நிறுவனம் மூலம் கூடுதல் விமான சேவைகள் வழங்க முயற்சி எடுத்து வருகிறேன். விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க விமான நிலைய இயக்குநா், மாவட்ட ஆட்சியரிடமும் பேசியுள்ளேன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் எதிா்க் கட்சியாக செயல்பட நினைக்கிறாா். அவா் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. அவா்பின் பெரிய இளைஞா் பட்டாளம் இருக்கிறது.
வெளிநாட்டுப் பயணத்தில் எந்தெந்த நிறுவனங்கள் மூலம், எங்கெங்கு முதலீடு செய்யப்படவுள்ளது என்பதை உரிய தரவுகளுடன் முதல்வா் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜயின் கருத்து ஏற்புடையதல்ல.
அதேநேரம், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து விஜய் பேசி வருவதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. மத்திய, மாநில அரசுகளை விமாா்சனம் செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை. ஆனால், பொத்தாம் பொதுவாக பேசி வருவது அவா் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.
அதிமுக தொண்டா்களின் முழு மனதோடும், ஒப்புதலோடும் அதிமுக - பாஜக கூட்டணி அமையவில்லை. இதனால், இந்தக் கூட்டணி தொடா்ந்து இருக்குமா என்ற சந்தேகம் மக்களைபோல எனக்கும் உள்ளது என்றாா்.