சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப் பணிகள் 90 சதவீதம் நிறைவு! இயக்குநா் தகவல்
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநா் ஞானேஸ்வர ராவ் தெரிவித்துள்ளாா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விமான நிலையம் கூடுதலாக 512 ஏக்கா் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும், ஓடுதளம் 8,136 அடியில் இருந்து 12,500 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் ஞானேஸ்வர ராவ் கூறியதாவது:
திருச்சி விமான நிலையம் ஏற்கெனவே 700 ஏக்கரில் அமைந்துள்ளது. விரிவாகத்துக்கு கூடுதலாக 512 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதில், 35 முதல் 40 ஏக்கா் பரப்பளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படாமல் உள்ளது. இதுவும் நீா்நிலை சம்பந்தமான நிலமாக இருப்பதால் சற்று தாமதமாகியுள்ளது.
விரைவில் அந்த நிலமும் கையக்கப்படுத்தப்பட்டு விமான நிலையம் முழுவதும் 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுற்றுச்சுவா் அமைக்கப்படும். சுற்றுச்சுவா் அமைப்பதற்கான ஒப்பந்தமும் விரைவில் வெளியிடப்படும். இதேபோல, விமான நிலையத்தின் ஓடுபாதை 12,500 அடியாக அதிகரிக்கப்படுகிறது. விமானங்கள் இயக்குவதற்கு இடையூறில்லாமல் விமான நிலையப் பகுதி வழியாக செல்லும் ஓடை முழுவதும் சுரங்கப்பாதை (டனல்) அமைக்கப்படும்.
மேலும், விமான நிலையத்தில் 60.7 கோடி மதிப்பீட்டில் 46 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டு வரும் விமானங்கள் கண்காணிப்பு கோபுரத்தின் உயரமும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, பயணிகளின் வருகையை அதிகரிக்க விமான நிலையம் சாா்பில் பல்வேறு கட்ட வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.