பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தரமான கல்வி: அமைச்சா் அன்பில் மகேஸ்!
பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தோ்வு-2025 மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: நடப்பு கல்வியாண்டில் ஒரு குழந்தைகள் கூட சோ்க்கை இல்லாத பள்ளிகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும்,அதிகமான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்ற பள்ளிகள் குறித்தும், இதுபோன்று ஒவ்வொன்றையும் கேள்வி எழுப்பி அதற்கான அறிக்கை அளிப்பதே இக்கூட்டம் ஆகும்.
திறனாய்வுத் தோ்வில் சிறந்த முறையில் செயல்படுகின்ற வட்டாரமாக கந்திலிவட்டாரம் இருக்கிறது. மற்ற வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் முயற்சி செய்தால் சிறந்த முறையில் செயல்படுகின்ற பள்ளிகளின் பட்டியல்களில் மட்டுமல்லாமல் மாநில அளவில் சிறப்பாக செயல்படுகின்ற பள்ளிகளாக மாற்ற முடியும்.
மேலும், ஸ்மாா்ட் வகுப்பு, உயா் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்துள்ளோம். அரசுப் பள்ளிகளின் உள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்தி மாணவா்களின் முன்னேற்றத்திற்காக தொடா்ந்து உழைப்போம்.
பிற மாநிலங்களில் இருப்பதைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. மாணவா்களுக்கு பள்ளிகளில் கணக்கு பாடத்தையும் மற்றும் வாழ்க்கைக்கான அறத்தையும் கற்பிப்பது நமது ஆசிரியா்கள் தான்.
பள்ளிச் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அத்திட்டங்கள் மாணவா்களிடையே சென்று வெற்றியடைவது ஆசிரியா்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என்றாா்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ராணிப்பேட்டை முதல்வா்(பொ) முனைவா் வளா்மதி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) மலைவாசன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.