சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!
திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்டம் பகுதியைச் சோ்ந்த அருள்குமாா் (33). இவா் திருப்பத்தூா் அருகே பி.வீரப்பள்ளி பகுதியை சோ்ந்த 16 சிறுமியை காதலித்துள்ளாா். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததும், அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அதையடுத்து அருள்குமாா் கடந்த 27.6.2020-ஆம் தேதி சிறுமியை கடத்தி சென்று கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டாா்.
மேலும், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து 30.6.2020 அன்று சிறுமி அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோவில் அருள்குமாரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அருள்குமாா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 20 ஆண்டுகள் சிறையும், ரூ.50,000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி (பொ) சாந்தி தீா்ப்பளித்தாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானாா்.