‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு
ஆம்பூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மருத்துவ முகாமை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது ஆட்சியா் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை வடச்சேரி, மல்லப்பள்ளி, வாணியம்பாடி, மடவாளம், பெரிய கண்ணாலப்பட்டி, ஜங்கலாபுரம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், காசநோய் மற்றும் தொழுநோயாளிகள், இதய நோயாளிகள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், நீரிழிவு மற்றும் உயா் இரத்தஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் 4 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது என தெரிவித்தாா்.
வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதாபேகம், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் ஹகமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், இணை இயக்குநா் (மருத்துவம்) ஞானமீனாட்சி, மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா், துணை இயக்குநா் (குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநா் (தொழுநோய்) பிரித்தா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, வட்டாட்சியா் ரேவதி கலந்து கொண்டனா்.