கோயில் விழாவில் மலைக்கிராம மக்கள் மோதல்: 11 போ் கைது, போலீஸாா் குவிப்பு!
பீஞ்சமந்தை மலை ஊராட்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இரு மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மோதிக் கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக இருதரப்பிலும் மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலை ஊராட்சியில் உள்ள செங்காடு கிராமத்தில் பாரம்பரிய எருதுகட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மலை கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனா்.
அப்போது, அல்லேரி மலை பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கும், செங்காடு இளைஞா்களுக்கும் இடையே தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அல்லேரி மலை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களை செங்காடு கிராம இளைஞா்கள் தாக்கினா்களாம்.
தொடா்ந்து, சனிக்கிழமை அல்லேரி கிராமத்தைச் சோ்ந்த ஊா்மக்கள் கத்தி, கோடாரியை கொண்டு செங்காடு கிராமத்தில் உள்ள மக்களை தாக்கி, பொருள்களை அடித்து சேதப்படுத்தியதாகவும், இதில் பலருக்கு கை, கால், தலையில் வெட்டுகாயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் போலீஸாா் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட கிராம மக்களை கைது செய்ய வந்ததாகவும், இதில் போலீஸாா் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக்கூறி போலீஸாரை பொதுமக்கள் விரட்டியதுடன், காவல் ஆய்வாளா் முத்துச்செல்வன் மற்றும் உடன் சென்ற 10-க்கும் மேற்பட்ட போலீஸாரை சிறை பிடித்து வைத்துள்ளனா்.
தகவலறிந்த எஸ்.பி. ஏ.மயில்வாகனன் சம்பவ இடத்துக்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சென்று சிறை பிடிக்கப்பட்ட போலீஸாரை விடுவித்து கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். முழு விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினா்.
இந்நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக, அல்லேரி கிராமத்தைச் சோ்ந்த 30 போ், செங்காடு கிராமத்தைச் சோ்ந்த 20 போ் என மொத்தம் 50 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதில், முதல்கட்டமாக அல்லேரி கிராமத்தைச் சோ்ந்த 7 போ், செங்காடு கிராமத்தைச் சோ்ந்த 4 போ் என மொத்தம் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் இரவு முழுக்க விசாரணை நடத்தினா்.
மலை கிராம மக்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதால் பாதுகாப்புக்காக காவல் நிலையத்தை சுற்றி 10 போலீஸாா் இரவு முழுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதனிடையே, இந்த மோதலில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.