ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
`விடுதலை படம் டு வாச்சாத்தி கொடூரம்..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து, விடுதலை படம், வாச்சாத்தி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...
``இளைஞர்கள் சி.பி.எம் கட்சியை கவனிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?”
``நிச்சயமாக கவனிக்கிறார்கள். உதாரணத்திற்கு விடுதலை படம் வந்தது, விடுதலை படம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழ்நாட்டில் எப்படி எல்லாம் வளர்ந்தது என்பதனை மையப்படுத்திய ஒரு திரைப்படம். அந்த மாதிரி திரைப்படத்தை எடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். தமிழ்நாடு மாதிரியான ஒரு மாநிலத்தில் எடுப்பதற்கு துணிச்சல் வேண்டும். கேரளாவில் அந்த திரைப்படத்தை எடுப்பது என்பது ஒரு பெரிய செய்தி இல்லை. ஏற்கனவே அது கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கிற மாநிலம். கம்யூனிஸ்ட் ஆளுகின்ற மாநிலம். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் கம்யூனிஸ்டு இயக்கம் எப்படி எல்லாம் அதனுடைய வரலாறுகளை உள்ளடக்கியதாக ஒரு படத்தை வெளியே கொண்டு வருவது என்பது ஒரு சாதாரண விஷயமே இல்லை. பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். துணிச்சலான முயற்சி தான் இது. அது ஃபெயிலியர் ஆகி இருந்தால் அவர் என்ன ஆகி இருப்பார் என்று தெரியவில்லை உண்மையிலேயே அது வெற்றிகரமாகும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஏராளமான இளைஞர்கள் கவனிக்க கூடிய ஒன்றாகவும், என்கிட்டயே நிறைய பேர் சார் உங்களுடைய வாச்சாத்தி படம் எடுத்திருக்கிறார்கள் என்று எத்தனையோ பேர் போன் செய்து இருக்கிறார்கள். எல்லாமே உங்க கதை தான் சார் என்று இப்படி எல்லாம் நிறைய இளைஞர்கள் வந்து பேசி இருக்கிறார்கள். போன் செய்து இருக்கிறார்கள்.”
``விடுதலை படம் மார்க்சிசம் பேசியது, ஆனால் கட்சிக்காரர்கள் பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள்?”
``இடதுசாரி கருத்தியல் சார்ந்த ஒரு ஈர்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்கு செல்வது யார் அதற்கு பொருத்தமானவர் என்று அவர்கள் தேர்வு செய்வதில் ஒரு சின்ன பிரச்னை இருக்கிற மாதிரி தான் எனக்கு தோன்றுகிறது. எங்களோடு ஒன்றும் அவர்கள் ஆயிரக்கணக்கில் வரவில்லை. இளைஞர்கள் வருகை குறைவாக தான் இருக்கிறது. இளைஞர்கள் வருவது என்பதுதான் கட்சிக்கு எதிர்காலம். இடதுசாரி கருத்தியலுக்கு உயிரோட்டமா இருக்கிறதுக்கு ரொம்ப முக்கியம். அது தான் நாங்க கவனிச்சது.”
``நிறைய மிரட்டல்களை சந்தித்து இருப்பீர்கள் அதையெல்லாம் உறுதியாக எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”
``நிறைய மிரட்டல்களை நான் சந்தித்துள்ளேன். மாணவர் சங்கப் பணியில் இருக்கும் பொழுது நடந்திருக்கிறது. மலைவாழ் மக்கள் சங்க பணியில் இருக்கும் பொழுதும் நிறைய மிரட்டல்கள் நடந்திருக்கின்றன. வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்ட பொழுது வனத்துறையில் இருந்து, காவல்துறையிலிருந்து நிறைய மிரட்டல்களை சந்தித்துள்ளேன். வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்ட பொழுது, பாதுகாப்பு இல்லாமல் வாச்சாத்தி பகுதிக்கு சென்றதே இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் பயணிக்கும் பொழுது, தோழர்களுடைய பாதுகாப்புடன், ஆயுதங்களுடன் தான் சென்று இருக்கிறேன். எல்லோருமே அரசாங்க ஊழியர்கள் காவல்துறை சார்ந்தவர்கள், வனத்துறை சார்ந்தவர்கள் எனவே பாதுகாப்புடன் தான் நான் பயணம் செய்திருக்கிறேன்.”
``வாச்சாத்தி சம்பவம் எப்போது உங்களுக்கு தெரிய வருகிறது, எப்போது நீங்கள் அந்த கிராமத்திற்குள் செல்கிறீர்கள்?”
``அந்த சம்பவம் நடந்தது 1992 ஜூன் மாதம் 20, 21, 22 ஆகிய தேதிகள். நாங்கள் அந்த பகுதியில் சென்றது ஜூலை மாதம் 14ஆம் தேதி. இதற்கிடையில், மலைவாழ் சங்கத்தின் சார்பாக எல்லா மலைகளிலும் அமைப்பை உருவாக்குவதற்காக, ஒரு மாநாட்டை தமிழ்நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரி ஒரு மாநாடு சித்தேரி மலையில் நடந்த பொழுது, தலைவர்கள் பேசுவதை பார்த்துவிட்டு வாச்சாத்தி பகுதியில் இருந்து தப்பித்து வந்த 2 பேர் தாமாக முன்வந்து வாச்சாத்தி கிராமத்தில் இப்படி நடந்தது, ஊரில் யாரும் இல்லை, பெண் பிள்ளைகள் மற்றும் ஆண்கள் 200 பேர் ஜெயிலில் அடைத்துள்ளனர், ஆடு மாடுகளை கொண்டு போய் சந்தையில் விற்று விட்டார்கள், பெண் பிள்ளைகளை கெடுத்து விட்டார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். எனவே இவர்கள் சொல்வதை வைத்து நம் உடனே தலையிட முடியாது. அதனால் நேரடியாக அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்ற முறையில் ஜூலை மாதம் 14ஆம் தேதி சென்றோம்.
நாங்கள் சென்றபோது அந்த கிராமத்தில் யாருமே கிடையாது, பேச்சு இல்லாத கிராமமாக அது இருந்தது. கிராமம் இருந்தது மக்கள் இருந்ததற்கான சுவடுகள் இருந்தது. மக்கள் வாழ்ந்ததற்கான வீடுகள் இருந்தது. ஆனால் மக்கள் யாரும் இல்லை. அப்படி ஒரு பேச்சு இல்லாத கிராமமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் தலையிட்ட பிறகு அது சிபிஐ விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிட்டத்தட்ட 33 வருடங்களாக அந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள ஜுடிசியல் சிஸ்டத்தில் உள்ள பிரச்சனை, ஏனென்றால் அந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு 19 வருடங்கள் ஆனது. என்னவென்றால் நீதிபதி விடுமுறை எடுக்கிறார், வக்கீல் விடுமுறை எடுக்கிறார், சாட்சி வராமல் இருப்பது இதுபோன்று ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது.
எஸ்சி எஸ்டி அட்ராசிட்டி ஆக்ட் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பதனால் ஸ்பெஷல் கோர்ட் ஃபார்ம் செய்ய வேண்டும். அதற்கே பல வருடங்கள் எடுத்துக் கொண்டது தமிழ்நாடு அரசு. உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்த பிறகு தான், சிறப்பு நீதிமன்றம் வாச்சாத்தி வழக்கிற்கு வாங்கினோம். தமிழ்நாட்டில் மொத்தம் 20 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும்தான் இருக்கின்றன. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அது சட்டத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 20 தனி நீதிமன்றங்கள்தான் இருக்கிறது. மீதி மாவட்டங்களில் கிளப் செய்து வைத்திருக்கிறார்கள். நான் முதல்வரை சந்திக்கும் பொழுது இந்த பிரச்சனை குறித்து பேசுவேன். ஏனென்றால் 10 வருடம் 15 வருடம் முன்பு போடப்பட்ட வழக்குகள் எல்லாம் விசாரிக்கப்படாமல் இருக்கிறது, தீர்ப்பு வராமல் இருக்கிறது. வன்கொடுமையினால் பாதிக்கப்படுவதை விட அந்த நீதிக்காக 10 வருடங்கள் 15 வருடங்கள் காத்துக் கொண்டிருப்பது பெரிய கொடுமை. நீதிமன்றத்தில் கேட்டால், பல நூற்றுக்கணக்கான வழக்குகள் இருக்கிறது நாங்கள் என்ன செய்ய முடியும். படிப்படியாக தான் விசாரிக்க முடியும். 10 வருடம் மற்றும் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்குகள் உட்பட ஸ்பெஷல் கோர்ட் இல்லாததனால் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கின்றன. எனவே மிகவும் முக்கியமான பிரச்சினையாக நான் இதைப் பார்க்கிறேன்.”
``வாச்சாத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது, அது எப்படி தீர்ப்பு வரும் என்று நினைக்கிறீர்கள்?”
``ஏற்கனவே தருமபுரி மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில், நாங்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் எல்லாமே நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு வந்து, உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தின் உடைய தீர்ப்பினை அப்படியே ஏற்று கூடுதலாக அப்போது இருந்த எஸ்பி மற்றும் கலெக்டர் ஆகிய இரண்டு பேரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடிஷனலாக தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், குற்றவாளிகள் பட்டியலில் எஸ்பி கலெக்டர் ஆகிய இரண்டு பேருமே கிடையாது. அப்போது எஸ்பியாக ராமானுஜன் ஐபிஎஸ் இருந்தார். பின்னாளில் தமிழ்நாடு காவல்துறையினுடைய தலைவராக இருந்தார். அவர் காலத்தில் பெரிய கொடுமை வாச்சாத்தி பகுதியில் நடந்தது, பின்னாளில் அவர் தமிழ்நாட்டிற்கே காவல்துறை தலைவர். பாருங்கள் கொடுமையை. அப்போது ஐஏஎஸ் கலெக்டராக இருந்தவருக்கு அதன் பிறகு தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவி உயர்வு கிடைத்தது.
ஒருவேளை இந்த மாதிரி செய்தால் தான் பதிவு உயர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்தது ஜெயலலிதா ஆட்சி காலத்தில். இவர்கள் இரண்டு பேரும் ப்ரோமோஷனில் சென்றதும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான். அவர்கள், இந்த மாதிரியான குற்றங்கள் இழைக்கக் கூடியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல், அவர்களை ஊக்கப்படுத்துவது பதிவு உயர்வு கொடுப்பது என்பது போன்ற மோசமான கலாச்சாரம் கொண்டிருந்தார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, சிறப்பு அதிரடி படையில் இருந்த ஆட்களுக்கு எல்லாம் ப்ரோமோஷன் கொடுத்தார்கள். அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சதாசிவ கமிஷன் உடைய அறிக்கையை படித்து பாருங்கள். எவ்வளவு பெரிய கொடுமை. பனிஷ் செய்ய வேண்டிய ஆட்களுக்கு எல்லாம், பதிவு உயர்வு கொடுத்தார்கள்.”
`உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எப்படி வரும் என நினைக்கிறீர்கள்?
``மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் வந்திருக்கிறது. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். அதற்கு காரணம், உண்மையைத் தவிர வேறு எதையும் நாங்கள் நீதிமன்றத்திற்கு முன்னாலோ, மக்கள் முன்னாலோ சொல்லவில்லை. அதனால் எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்திலும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”