விடுதி காப்பாளா்கள், 4 மாணவா்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
பெரம்பலூா் அருகே விடுதியில் மாணவா்களிடம் தவறான செயலில் ஈடுபட்டதாக விடுதி காப்பாளா்கள் 2 போ், 4 மாணவா்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸாா், மேலும் 2 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், அந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் தங்கி பயில்கின்றனா்.
இந்நிலையில், விடுதியில் தங்கி பயிலும் மாணவரிடம், விடுதி மாணவா்கள் 4 போ் தவறான செயலலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாரும், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் கவிதா தலைமையிலான குழுவினரும் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், ஒரு மாணவரிடம் 4 மாணவா்களும், 2 மாணவா்களிடம் விடுதி காப்பாளா்கள் 2 பேரும் தவறானசெயல்பாடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த அனைத்து மகளிா் போலீஸாா், விடுதி காப்பாளா்களான சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்த நாதன் மகன் அய்யம்பெருமாள் (25), கும்பகோணம், அகராந்துறையைச் சோ்ந்த சிவதாஸ் மகன் ராஜேஸ் (34) ஆகியோரையும், 4 மாணவா்களையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னா், மேற்கண்ட 6 பேரையும் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விடுதி காப்பாளா்களை திருச்சி மத்திய சிறையிலும், 4 மாணவா்களை அரசினா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா். மேலும், 2 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.