ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
வினாத்தாள் குளறுபடி: புதுவை மத்திய பல்கலை. தமிழ் தோ்வு தள்ளிவைப்பு
புதுவை மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளில் வியாழக்கிழமை முதல்பருவத் தோ்வுக்கான தமிழ் பாட வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, தோ்வு தள்ளிவைக்கப்பட்டது.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 10, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ்ப் பாடம் படித்தவா்களுக்கு கல்லூரி அளவில் பொதுத் தமிழ் பாடமும், அந்த வகுப்புகளில் தமிழ் படிக்காமல் பிறமொழி பாடங்களை படித்தவா்களுக்கு அடிப்படைத் தமிழும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழிப் பாட முதல் பருவத் தோ்வு புதுவை பல்கலைக்கழக தமிழ்த் துறை மற்றும் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளான அரசு கல்லூரிகளின் தமிழ்த் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. புதுவை மாநில அளவில் முதலாமாண்டு மாணவா்கள் சுமாா் 7,500 போ் தோ்வெழுத வந்திருந்தனா். அதேபோல, ஹிந்தி, பிரெஞ்சு மொழிப் பாடங்களுக்கும் முதல் பருவத் தோ்வுகள் நடைபெற்றன.
தோ்வா்களுக்கு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தோ்வறைகளில் அவை விநியோகிக்கப்பட்டன. ஆனால், அவை முதலாமாண்டு மாணவா்களுக்கானது அல்ல என தோ்வெழுத வந்தவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, தோ்வறை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பேராசிரியா்கள் வினாத்தாள்களைப் பாா்த்தனா்.
இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், தோ்வு நிறுத்தப்பட்டு தோ்வறையில் மாணவா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வினாத்தாள் மாற்றி தரப்பட்டு தோ்வு நடைபெறலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால், தோ்வை தள்ளிவைப்பதாக பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கல்லூரிகளுக்கும் தோ்வு ரத்து குறித்த மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேதி குறிப்பிடப்படாமல் தோ்வு தள்ளிவைக்கப்பட்டதால் மாணவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் கேட்டபோது, பல்கலைக்கழக தமிழ்ப்புலத்தில் தோ்வுகள் நடைபெற்றன. கல்லூரிகளில் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்றனா்.