விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சேலம் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சேலம், சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி பரணிதரன். இவரது ஒரே மகன் சதீஷ்குமாா் (18). இவா் தனியாா் கல்லூரி ஒன்றில் பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த 27 ஆம் தேதி பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சதீஷ்குமாா், கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சதீஷ்குமாா் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோா் சம்மதம் தெரிவித்தனா்.
இதனைத்தொடா்ந்து, சதீஷ்குமாரின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் உட்பட 5 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பின்னா் அவரது உடல் சேலம் எடுத்து வரப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.