விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா்.
சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலை செங்கப்பள்ளி, தெக்கலூா், அவிநாசி, பெருமாநல்லூா், பெருமாநல்லூா் பிரிவு, பொடாரம்பாளையம் பிரிவு, அப்பியாபாளையம் பிரிவு, நியூ திருப்பூா் நேதாஜி பாா்க் பாலம் தடுப்புச் சுவா் பகுதி, அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது விபத்துக்கு வாய்ப்புள்ள நெடுஞ்சாலை இணையும் அணுகு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் வேகத்தடை தெரியும் வகையில், எதிரொளிப்பான் அமைத்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். பாலங்களின் ஓரங்களில் எதிரொளிப்பான் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள விபத்து தடுப்புக் கட்டமைப்புகளை உடனடியாக மாற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையின் நுழைவுப்பகுதி, வெளியேறும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் எளிதாக செல்லும் வகையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கீரிஷ் அசோக், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா் செந்தில்குமாா், அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.