விராட் கோலி, க்ருணால் பாண்டியா அசத்தல்: ஆர்சிபிக்கு 7-வது வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட்டின் 46-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுக்க, பெங்களூரு 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா் அசத்த, பேட்டிங்கில் கிருணால் பாண்டியா அதிரடி காட்டினாா். விராட் கோலி அவருக்குத் துணை நின்றாா்.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீசத் தயாரானது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் பொரெல் - ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூட்டணி, 33 ரன்களுக்கு பிரிந்தது. பொரெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடா்ந்து வந்த கருண் நாயா் 4 ரன்களுக்கு நடையைக்கட்ட, 4-ஆவது பேட்டா் கே.எல்.ராகுல் நிதானமாக ரன்கள் சோ்த்தாா். டு பிளெஸ்ஸிஸ் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
5-ஆவது வீரராக களம் புகுந்த கேப்டன் அக்ஸா் படேல் 15 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ரன்கள் சோ்க்க, ராகுல் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
தொடா்ந்து ஆசுதோஷ் சா்மா 2, விப்ராஜ் நிகம் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கடைசியில் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் மிட்செல் ஸ்டாா்க் 0, துஷ்மந்தா சமீரா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பெங்களூரு பௌலா்களில் புவனேஷ்வா் குமாா் 3, ஜோஷ் ஹேஸில்வுட் 2, யஷ் தயாள் மற்றும் கிருணால் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 163 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில் ஜேக்கப் பெத்தெல் 12, தேவ்தத் படிக்கல் 0, கேப்டன் ரஜத் பட்டிதாா் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி - க்ருணால் பாண்டியா இணை 119 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. இதில் கோலி 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
முடிவில் க்ருணால் பாண்டியா 47 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 73 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். டிம் டேவிட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு துணை நின்றாா். டெல்லி தரப்பில் அக்ஸா் படேல் 2, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினா்.