``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்த...
விராலிமலை: கி.பி 13 ஆம் நூற்றாண்டு வீரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மைலாப்பட்டி மலை மீது சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் முத்தழகன், பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் குழுவினர் மைலாப்பட்டி மலை மீது உள்ள சிதிலமடைந்த சிவன் கோயிலில் ஆய்வு செய்ததில் கோயிலின் அதிட்டானத்தில் உடைந்து கிடக்கும் இரு குமுதப்பட்டைகளில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு குறித்து முத்தழகன் கூறுகையில், சிதிலமடைந்த கோயில் கட்டுமானத்தின் தென்புறம் உடைந்து கிடக்கும் இரு குமுதப் பட்டைகளில் 5 வரிகளில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீரபாண்டிய தேவரின் 8 ஆவது ஆட்சியாண்டில் உடையார் ராசராசிஸ்வரமுடைய நாயனார் ஆதி சண்டேஸ்வர தெய்வன்காமிகளுக்கு, அதாவது கோவில் நிர்வாகத்திற்கு தேவதானமாக இவ்வூர் வயலில் பண்டன் தோட்டம் நத்த பறிகாலில் நான்கு எல்லைக்கு உட்பட்ட ஒரு மாவரை நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தில் விளையும் நெல்லில் பதினேழு கலனே ஐஞ்ஞாழி நெல் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்னும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். இக்கல்வெட்டின் குறிப்பிடப்படும் வீரபாண்டியன் பிற்கால பாண்டிய அரசனான இரண்டாம் சடையவர்மன் வீர பாண்டியனாக இருக்க வாய்ப்புள்ளது. அவரது 8 வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 1261 இல் இக்கல்வெட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இக்கல்வெட்டின் மூலம் இந்தச் சிவன் கோயில் இறைவன் பெயர் இராசராசிஸ்வரமுடைய நாயனார் எனத் தெரியவருகிறது. தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள இந்தக் கோயிலின் உடைந்த லிங்கத்தின் அடிபாகம் மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் உள்ளன. இந்தக் கோயிலின் தென்கிழக்கு சரிவில் சிதலமடைந்த சமணப் பள்ளி ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான உடைந்து கிடக்கும் இந்தக் கல்வெட்டு உள்ள குமுதப் பட்டைகளை, முறையாக இணைத்துக் கோயில் அதிட்டானத்தில் கட்டிப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!